டெல்லி,ஜன.27; நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (28.01.2026) தொடங்க உள்ள நிலையில், இன்று (27.01.2026) டெல்லியில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் நாளை தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கும். பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, 2026 – 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு சார்பில் இன்று (27.01.2026) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அரசு மீது குற்றச்சாட்டு
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கமான கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கே. சுரேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்த பட்டியலை (Legislative Agenda) அரசு முன்னரே வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கே. சுரேஷ், “அரசு எந்தெந்த மசோதாக்களை கொண்டு வரப்போகிறது என்பது குறித்த தெளிவான திட்டத்தை எங்களிடம் வழங்கவில்லை. இது குறித்து கூட்டத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம்,” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் பதில்
எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்கள், சட்டப்பணிகள் குறித்த பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். கூட்டத்தொடரின் முதல் பகுதி முக்கியமாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களில் கவனம் செலுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9ஆவது பட்ஜெட்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார். ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் நிலவினாலும், மறுபுறம் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை உறுதி செய்ய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் தேவை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
