புலவாயோ,ஜன.28; 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் (Super Six) சுற்றில், இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (27.01.2026) நடைபெற்ற போட்டியில், ஜிம்பாப்வே அணியை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. விஹான் மல்ஹோத்ராவின் பொறுப்பான சதம் மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ஆகியவை இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
விஹான் மல்ஹோத்ரா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். வெறும் 30 பந்துகளில் 52 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசிய அவர், இந்தியாவின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.
சற்று தடுமாறிய இந்திய அணி மீண்டெழுந்து அபாரம்
இருப்பினும், வைபவ் மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா சற்று தடுமாறியது. இந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய விஹான் மல்ஹோத்ரா (Vihaan Malhotra), விக்கெட் கீப்பர் அபிஞான் குண்டுவுடன் (Abhigyan Kundu) இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். விஹான் மல்ஹோத்ரா நிதானமாக விளையாடி 109 ரன்கள் (107 பந்துகள், ஆட்டமிழக்காமல்) குவித்து தனது சதத்தைப் பதிவு செய்தார். இவருக்கு உறுதுணையாக நின்ற அபிஞான் குண்டு 61 ரன்கள் எடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் கிலன் படேல் (Khilan Patel) 12 பந்துகளில் 30 ரன்கள் விளாச, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 352/8 என்ற இமாலய இலக்கை எட்டியது.
பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி
353 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறியது. ஆரம்பத்திலேயே ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (RS Ambrish) மற்றும் ஹெனில் படேல் ஜிம்பாப்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.இதன் மூலம் இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.
வருவதும் போவதுமாக இருந்த ஜிம்பாப்வே வீரர்கள்
ஜிம்பாப்வே வீரர் லீராய் சிவாலா (Leeroy Chiwaula) மட்டும் தனி ஆளாகப் போராடி 62 ரன்கள் எடுத்தார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இந்தியாவின் கேப்டன் ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre) மற்றும் உத்தவ் மோகன் (Udhav Mohan) தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில், ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி!
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் குரூப்-2 பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலம் வாய்ந்த அணியாகத் திகழும் இந்தியா, தனது அடுத்த போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
