Skip to content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காயம் காரணமாக முசெட்டி விலகல் – அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்!

மெல்போர்ன், ஜன.29; மெல்போர்ன் பூங்காவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி காயம் காரணமாக பாதியிலேயே விலகியதை அடுத்து, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ஷ்டவசமாக அரையிறுதிப் போட்டிக்குத் முன்னேறியுள்ளார்.

முசெட்டியின் அதிரடி ஆட்டமும் எதிர்பாராத திருப்பமும்

நேற்று (28.01.2026) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச்சை எதிர்த்து ஐந்தாம் நிலை வீரரான லோரென்சோ முசெட்டி களம் கண்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முசெட்டி ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு செட்களை 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு பெரும் அதிர்ச்சி அளித்தார்.

தசைப்பிடிப்பால் பாதியிலேயே வெறியேறினார் முசெட்டி

இருப்பினும், மூன்றாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தபோது (ஜோகோவிச் 3-1 என முன்னிலை), முசெட்டிக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை பெற்றும் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனதால், கண்ணீருடன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நான் வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டியவன்: ஜோகோவிச் நெகிழ்ச்சி

போட்டிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், முசெட்டியின் ஆட்டத்தைப் பாராட்டியதோடு தனது அதிர்ஷ்டத்தையும் ஒப்புக்கொண்டார்.

“முசெட்டிக்காக நான் மிகவும் வருந்துகிறேன்; இன்று அவர்தான் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்; உண்மையைச் சொல்லப்போனால், நான் இன்று தோல்வியடைந்து வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டியவன்; விளையாட்டு உலகில் இது போன்ற காயங்கள் ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது” என்று ஜோகோவிச் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவை நோக்கி ஒரு படி நெருங்கியுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய ஓபனில் அதிக வெற்றிகளைப் பெற்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

அரையிறுதியில் ஜானிக் சின்னர் உடன் மோதல்

மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்திய நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். கடந்த முறை ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர், மீண்டும் ஒருமுறை அவருக்கு சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முசெட்டியின் காயத்தால் ஜோகோவிச்சிற்கு மறுவாழ்வு

காயம் காரணமாக முசெட்டி விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், ஜோகோவிச்சிற்கு இது ஒரு மறுவாழ்வு கிடைத்துள்ளது போன்றதே. 38 வயதிலும் தளராத உறுதியுடன் விளையாடும் ஜோகோவிச், இளைய தலைமுறை வீரரான சின்னரை அரையிறுதியில் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே இப்போது டென்னிஸ் உலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *