சென்னை,ஜன.29; தவெக-வின் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கிவிட்டன.
அந்த வகையில் அரசியலுக்கு புதிதான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, தேர்தல் அறிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க தவெக முடிவெடுத்துள்ளது.
மக்களிடமிருந்தே உருவாகப்போகும் தேர்தல் அறிக்கை
இதுதொடர்பாக அக்கட்சி இன்று (29.01.2026) வெளியிட்டுள்ல அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, மக்களுக்கான அறிக்கை மக்களிடம் இருந்தே உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்
மேலும் இதற்காகக் கூடுதலான தரவுகளைப் பெறவும் பொதுமக்களின் தேவைகள் குறித்து முழு விவரங்களைச் சேகரிக்கவும் தேர்தல் அறிக்கைக் குழுவானது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்க திட்டம்!
மேலும் இக்குழுவினர் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பொதுமக்கள், விவசாயச் சங்கங்களின் உறுப்பினர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு தொழில் அமைப்புகளைச் சார்ந்தோர் உள்ளிட்டோரைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்க உள்ளனர். இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட இருக்கிறது.
மாவட்ட வாரியாக தேர்தல் அறிக்கை குழு பயணம்
மேற்கண்ட குழுவினருக்கு அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு தவெகவின் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
