சென்னை,ஜன.30; இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று (30.01.2026) நடைபெற்ற கருத்தரங்கில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ஒருபக்கம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கொடுத்துவரும் அரசியல் நெருக்கடிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, மறுபக்கம் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார். தேவைகளுக்கேற்ப தங்களின் கொள்கைகளும் “Evolve”, அதாவது பரிணாமமும் மாறிக் கொண்டே இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டும்”
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தான் எழுதப்பட வேண்டும்-அதேபோல், வளர்ச்சியும், தெற்கில் தமிழ்நாட்டில் தொடங்கி தான் எழுதப்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இந்த வளர்ச்சி வரலாற்றை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பி வருகின்றனர் என விமர்சித்தார். எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பழைய திரைக்கதைகள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு; பாஜகவிடம் ஏன் வலியுறுத்துவதில்லை?
நீட் தேர்வு விலக்குப் பற்றி அக்கறையுடன் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சியினர், அவர்களின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜகவிடம் அதை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள்? அஞ்சி நடுங்குகிறார்கள்? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
திமுக மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது வாரிசு அரசியல். இதற்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களுக்கு முன்னால் நின்று, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு பெற்றால் மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு. அடுத்து சொல்வது என்ன? ஊழல். இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்களா? கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் வளர்ச்சியை சாதாரணமாக அடையவில்லை”
தமிழ்நாடும் – தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்திற்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், “இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். இந்த வளர்ச்சியை நாங்கள் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. சமூகத்தில் எந்தவொரு பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்று, மிகவும் கவனமாக பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம்.
பாஜகவுடன் இருக்கும் அனைவருமே ஊழல்வாதிகள் தான்…!
நான் பாஜகவிடம் கேட்பது என்வென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக. நீங்கள் கூட்டணியில் இல்லாத சமயத்தில், அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்கள் எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி.
“4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு” திமுக இந்துவிரோத கட்சியா?
அடுத்து, இந்து விரோத கட்சி என்று பேசுவார்கள். ஆனால், உண்மை என்ன? இந்தியாவிலேயே, பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு, நாங்கள் ஆட்சி அமைத்து இந்த ஆயிரத்து 730 நாட்களில், நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இப்படி, பாஜக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் ஆதாரத்தோடு பதில் சொல்லிவிட்டேன். ஆனால், அவர்களோ, நாங்கள் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
