நெல்லை,ஜன.30; சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் குழு தலைவரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
நெல்லையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு
இதில் குழு உறுப்பினர்கள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர்.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர்.
“திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகின்றனர்”
பின்னர் பேசிய கனிமொழி, ”திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகத் தந்து வருகிறார்கள்.
“ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது” என்றார் கனிமொழி எம்.பி.
எல்லோருக்கும் தன்மானம்தான் முக்கியம்: கனிமொழி
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன்மானமே முக்கியம் என்று பேசியது குறித்த கேள்விக்கு, ”எல்லாருக்கும் தன்மானம்தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவது இல்லை” என்று கனிமொழி தெரிவித்தார்.
“காங்கிரசுடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை”
எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் என்பது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் உடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
