திருப்பூர் தெற்கு தொகுதி (எண் – 114)
திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து திருப்பூர் தெற்கு தொகுதி கடந்த 2011ஆம் ஆண்டு, தொகுதிகள் மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது.
இதுவரை 3 தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக மற்றும் திமுக தலா ஒரு முறை வென்றுள்ளன.
இங்கு ஆதி திராவிடர்கள் 30 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 20 விழுக்காடு பேரும் உள்ளனர். இவர்கள் தவிர, கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், முதலியார், செட்டியார் உள்ளிட்ட சமூகத்தினர் பரவலாக இருக்கின்றனர்.
மீண்டும் சீட் கேட்கும் திமுக எம்எல்ஏ செல்வராஜ்
திமுகவில் தற்போதைய எம்எல்ஏ செல்வராஜ் மீண்டும் சீட் கேட்கிறார். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் தவிர, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், மாநகரச் செயலாளர் தங்கராஜ் ஆகியோரும் சீட் பெற முயற்சிக்கின்றனர்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்தொகுதியை குறிவைத்திருக்கின்றன.
சீட்டுக்கு காய் நகர்த்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தன்
அதிமுகவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்பி சிவசாமி, மறைந்த முன்னாள் எம்எல்ஏ குணசேகரனின் மனைவி கவிதா, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் சீட்டுக்காக காய் நகர்த்துகின்றனர்.
கடந்த தேர்தலில், திமுகவின் செல்வராஜ் 76,000 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் குணசேகரனுக்கு 71,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் க.சண்முகசுந்தரத்திற்கு 13,000 வாக்குகளும் கிடைத்தன.
வரும் தேர்தலில், தவெகவும் களமிறங்குவதால், வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. இருப்பினும், இஸ்லாமியர், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் பக்கபலமாக இருப்பதால், தற்போதைய சூழலில் திமுக முந்துகிறது.