சென்னை,பிப்.03; மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இரண்டு அதிவேக ரயில் திட்டங்கள் தவிர்த்து பெரியளவில் திட்டங்களுக்கான முதலீடு பற்றிய அறிவிப்புகள் இல்லை என்றும் எதிர்க்கட்சியின் குறை கூறியுள்ளனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென மறுத்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் செய்தியாளர்களிிடம் பேசிய அமைச்சர் வைஷ்ணவ், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு: 9 மடங்கு அதிகரிப்பு
2026-27 நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-2014 காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு ₹879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகை 9 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-26 நிதியாண்டில் ₹6,626 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததுடன் ஒப்பிடுகையில் இது கூடுதல் நிதியாகும்.
அதிவேக ‘டைமண்ட்’ காரிடார் மற்றும் புல்லட் ரயில்
தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய அதிவேக ரயில் தடங்கள் (High-speed corridors) அடையாளம் காணப்பட்டுள்ளன:
சென்னை – பெங்களூரு: பயண நேரம் 1 மணிநேரம் 13 நிமிடங்களாக குறையும்.
சென்னை – ஹைதராபாத்: பயண நேரம் 2 மணிநேரம் 55 நிமிடங்களாக குறையும்.
இந்தத் திட்டங்கள் ‘தென்னிந்திய டைமண்ட் காரிடார்’ என்று அழைக்கப்படுகின்றன. இதில் 350 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு
ரயில் நிலைய மேம்பாடு: ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் ₹3,147 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 18 நிலையங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
புதிய வழித்தடங்கள்: அத்திப்பட்டு – புத்தூர் (88 கி.மீ) மற்றும் மன்னார்குடி – பட்டுக்கோட்டை (41 கி.மீ) ஆகிய புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
எழும்பூர் ரயில் நிலையம்: எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும்.
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில்: இப்பணிகள் முடிந்துவிட்டன. பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு, வரும் மார்ச் மாதம் இந்த வழித்தடம் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும்.
சாதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மின்மயமாக்கல்: தமிழ்நாட்டில் 2014 முதல் தற்போது வரை 2,386 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 97% மின்மயமாக்கல் இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கவாச் (Kavach): ரயில்கள் மோதுவதைத் தவிர்க்கும் தானியங்கி பாதுகாப்பு முறை (ATP) 427 கி.மீ தூரத்திற்குச் செயல்படுத்த டெண்டர் மற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வந்தே பாரத்: தற்போது தமிழ்நாட்டில் 9 ஜோடி வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே இணைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும்
மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் தமிழகத்தின் ரயில்வே இணைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் தொழில் மற்றும் வர்த்தகம் பெரும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியபட்ஜெட், தமிழ்நாட்டிற்குநிதி, அஸ்வினிவைஷ்ணவ், ரூ7611கோடி, UnionBudget, TamilNaduAllocation, RailwayMinister, AswiniVaishnav,RS7611Crores
