கோவை,பிப்.03; வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆறு தொகுதிகளின் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் தீவிர முனைப்புடன் களமிறங்கி பணியாற்றி வருகின்றன.
தொகுதிப்பங்கீடு பேச்சு,தேர்தல் அறிக்கை தயாரித்தல், வியூகம் வகுத்தல் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் முமுழுச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.
6 தொகுதிகளின் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்
அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
அதன்படி, மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
உடல்நலம் குன்றிய தந்தையை கவனிக்க பொறுப்பிலிருந்து விலகல்
இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் இன்று (பிப்.3) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை எனத் தெரிவித்தார். அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன்.
யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு மத்திய பட்ஜெட்
அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட் யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு உள்ளது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டுமே மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டில் நடந்த அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?. அண்ணாவின் குடும்பம் இன்று எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?. அவர்கள் யாரும் அரசியல் பக்கம் வருவதே இல்லை. இப்போதைய சூழலில், அண்ணா என்ற பசு மாட்டின் மீது நிற்கும் காகம் தான் திமுக ஆட்சி. திமுக மீதான வெறுப்பு திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானதாக மாறி வருகிறது
‘திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி’
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ‘கெட் – இன்’ தான். அதுபோல், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தொண்டர்களிடம் விசில் பெறுவதற்காகப் பேசுகிறார் விஜய்
தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்றுக் கொண்டால் பார்க்கலாம் என்றும் அண்ணாமலை கூறினார்.
