திரிபோலி,பிப்.04; லிபியாவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மறைந்த சர்வாதிகாரி முஅம்மர் கடாஃபியின் மகன், சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி (Saif al-Islam Gaddafi), ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011-ல் கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபிய அரசியலில் மீண்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற சைஃப்பின் மரணம், அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்தது எப்படி?
லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜின்டன் (Zintan) நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபியின் இல்லத்தில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (03.02.2026) மதியம், முகமூடி அணிந்த நான்கு மர்ம நபர்கள் இஸ்லாம் கடாஃபியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்கச் செய்த அவர்கள், சைஃப் அல்-இஸ்லாமுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாக அவரது அரசியல் குழு மற்றும் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சர்ச்சை நாயகனின் பின்னணி
1972-ல் பிறந்த சைஃப் அல்-இஸ்லாம், முஅம்மர் கடாபியின் இரண்டாவது மகன் ஆவார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (LSE) முனைவர் பட்டம் பெற்ற இவர், ஒரு காலத்தில் லிபியாவின் நவீன முகமாகவும், சீர்திருத்தவாதியாகவும் பார்க்கப்பட்டார். தனது தந்தைக்குப் பிறகு லிபியாவை ஆளப்போகும் வாரிசாகவே இவர் கருதப்பட்டார்.
இருப்பினும், 2011-ம் ஆண்டு நேட்டோ ஆதரவுடன் நடந்த உள்நாட்டுப் போரின் போது, போராட்டக்காரர்களுக்கு எதிராக தனது தந்தை எடுத்த கடும் நடவடிக்கைகளை ஆதரித்தார். இதனால் அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
பத்தாண்டுகால மறைவு வாழ்க்கை
2011-ல் அவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு, சைஃப் அல்-இஸ்லாம் தப்பி ஓட முயன்றபோது கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டார். சுமார் ஆறு ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்த அவர், 2017-ல் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். அன்றிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வாழ்ந்து வந்த அவர், 2021-ல் லிபிய அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார்.
அரசியல் வெற்றிடம் ஏற்படுமா?
சைஃப் அல்-இஸ்லாமின் மரணம் லிபியாவின் அரசியல் சூழலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் ஒரு பகுதியினர் இவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பிய நிலையில், மற்றொரு தரப்பினர் கடாஃபி காலத்து அடக்குமுறைகளை நினைவுபடுத்தி இவரை எதிர்த்தனர். தற்போது அவர் கொல்லப்பட்டது, லிபியாவின் தேர்தல்கள் மற்றும் எதிர்கால ஸ்திரத்தன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சோகமாக முடிந்த இஸ்லாம் கடாஃபி வாழ்க்கை
லிபியாவின் சக்திவாய்ந்த வாரிசாகத் தொடங்கி, போர்க்குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்த சைஃப் அல்-இஸ்லாமின் கதை ஒரு சோகமான முடிவை எட்டியுள்ளது. அவரது மரணத்தை ஒரு “துரோகம் நிறைந்த கொலை” என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். லிபிய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
