சென்னை,பிப்.04; சென்னையில் சமீபகாலமாக தார்மீக போலீஸ் (Moral Policing) என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கேளம்பாக்கத்தில் கைகோர்த்து நடந்து சென்ற இளம் ஜோடியினர் மீது ஒரு கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேளம்பாக்கத்தில் நடந்தது என்ன?
கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத் (23), கடந்த திங்கட்கிழமை (02.02.2026) இரவு 10 மணியளவில் தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரும் கைகோர்த்து நடப்பதை ஆட்சேபித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தனியாக நடக்கும்படி கூறி மிரட்டியுள்ளனர்.
பெற்றோருக்கும் நேர்ந்த அவலம்
அந்தப் பெண் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டபோது, ஆத்திரமடைந்த கும்பல் வினோத்தை சரமாரியாகத் தாக்கியது. உடனே அந்தப் பெண் வினோத்தின் பெற்றோருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வினோத்தின் தந்தை கோபி மற்றும் தாய் செல்வி ஆகியோரையும் அந்த கும்பல் விடவில்லை. அவர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த தந்தை,மகனுக்கு மருத்துவ சிகிச்சை
இந்தத் தாக்குதலில் வினோத் மற்றும் அவரது தந்தை கோபிக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாய் செல்விக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மூவரும் உடனடியாக திருப்போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘தார்மீக போலீஸ்’ யார் என காவல்துறை தீவிர விசாரணை
இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “மீண்டும் உங்களைச் சேர்த்துப் பார்த்தால் கொலை செய்துவிடுவோம்” என அந்த கும்பல் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தப்பி ஓடிய அந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தனிமனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை
தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதும், தார்மீக போலீஸ் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்கள் சமூக அமைதியைக் குலைப்பதோடு, பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
