இஸ்லாமாபாத்,பிப்.06; ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா வங்கதேச அணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வங்கதேசம் இந்தத் தொடரில் விளையாடாதது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசம் விலகலும் சர்ச்சையும்
பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது. இதனால், ஐசிசி வங்கதேச அணியைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது. இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் எங்கள் சகோதரர்கள்: சல்மான் ஆகா
கொழும்பில் நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பில் பேசிய சல்மான் அலி ஆகா, “வங்கதேசத்தினர் எங்களின் சகோதரர்கள்-பாகிஸ்தான் அணிக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்-அவர்கள் இந்த உலகக்கோப்பையில் விளையாடாதது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயம்-தொடர் முழுவதும் அவர்கள் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான்
வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த லீக் போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்துக் கேட்டபோது, “இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசின் முடிவு, அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம்” என சல்மான் ஆகா விளக்கமளித்தார்.
பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை
சமீபகாலமாக ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் சொதப்பி வந்தாலும், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருப்பதாக சல்மான் கூறினார். “கடந்த சில மாதங்களாக நாங்கள் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்த உலகக்கோப்பையை வெல்வோம் என்ற 100% நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்” என அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் விலகியதால் ரசிகர்களுக்குதான் இழப்பு
அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் ஒரு ஆசிய நாடு உலகக்கோப்பையிலிருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அண்டை நாடுகளுக்கிடையேயான இந்த விளையாட்டுத் தோழமை, இக்கட்டான சூழலிலும் கிரிக்கெட் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
