துபாய், பிப்.08; ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), தற்போது தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
பாகிஸ்தான் அரசு, பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. ஆனால், ஐசிசி (ICC) இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட போட்டியை மட்டும் புறக்கணிப்பது உலகளாவிய விளையாட்டுத் தொடரின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் என்று ஐசிசி எச்சரித்தது. மேலும், இதற்காக பாகிஸ்தான் வாரியம் முன்வைத்த தவிர்க்க முடியாத சூழல் (‘Force Majeure’) என்ற வாதத்தை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்துவிட்டது.
பொருளாதார நெருக்கடியும் ஐசிசியின் அழுத்தமும்
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால், ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட பாகிஸ்தான் வாரியத்திடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும், எதிர்கால தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் ஐசிசி சூசகமாகத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இலங்கை கிரிக்கெட் வாரியமும் (SLC) பாகிஸ்தானுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், இப்போட்டி நடைபெறாவிட்டால் தங்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
முடிவு யாருடைய கையில்?
தற்போது பிசிபி (PCB) தலைவர் மோசின் நக்வி, ஐசிசி அதிகாரிகளுடன் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். “மோதல் போக்கை விட, சுமூகமான தீர்வை எட்டுவதே எங்களது நோக்கம்” என்று ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகா, இது அரசின் முடிவு என்றும், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படியே தாங்கள் நடப்போம் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி முடிவிலிருந்து பின்வாங்க வாய்ப்பு
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களின் உணர்வு. சர்வதேச அழுத்தம் மற்றும் பொருளாதார காரணங்களால் பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவில் இருந்து தலைகீழ் மாற்றத்தை (U-turn) எடுக்க அதிக வாய்ப்புள்ளது. நாளைக்குள் (பிப்ரவரி,9) இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
