ஸ்ரீவைகுண்டம் தொகுதி (எண் – 216)
தினத்தந்தி நாளேட்டின் நிறுவனரும் தமிழர் தந்தை என்ற அழைக்கப்படுபவருமான சி.பா.ஆதித்தனாரை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இருமுறை அனுப்பிவைத்து அழகு பார்த்த தொகுதி ஸ்ரீவைகுண்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத்தொகுதி 1957 தொடங்கி இதுவரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 16 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 8 முறையும், திமுக மூன்று முறையும், அதிமுக 5 முறையும் வென்றுள்ளன.
இத்தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாடார் சமூகத்தினர் 40 சதவீதம் உள்ளனர். பிள்ளைமார் மற்றும் பட்டியலினத்தவர் தலா 20 விழுக்காடும், இவர்களு க்கு அடுத்தபடியாக மறவர் சமூகத்தினரும் உள்ளனர். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்களும் பரவலாக வாழ்கின்றனர்.
கோட்டையை தக்க வைக்குமா காங்கிரஸ்?
கடந்த தேர்தலில் வென்ற காங்கிரஸின் ஊர்வசி அமிர்தராஜ் இம்முறையும் சீட் எதிர்பார்க்கிறார்.
ஒருவேளை இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், காவல்காடு சொர்ணகுமார் ஆகியோர் சீட்டுக்காக காய் நகர்த்துகின்றனர்.
அதிமுகவில், முன்னாள் எம்எல்ஏ சண்முகநாதன், முன்னாள் எம்பி சிவசாமி ஆகியோர் போட்டியிட மெனக்கெடுகின்றனர்.
எவ்வளவு வாக்குகளை பிரிக்கப்போகிறது தவெக?
2021 தேர்தலில், காங்கிரசின் ஊர்வசி அமிர்தராஜ் 77,000 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் சண்முகநாதனுக்கு , 59,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சுப்பையா பாண்டியனுக்கு 13,000 வாக்குகளும் கிடைத்தன.
வரும் தேர்தலில் தவெக வாக்குகளைப் பங்கு போட வாய்ப்புள்ளது. ஆனாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கே சாதகமான சூழல் நிலவுகிறது.
