Skip to content

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ரம்ஜான், பக்ரீத் நாட்களில் மட்டும் தொழுகை நடத்தலாம்; உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி,பிப்.09; திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இரு நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை வழங்கினர்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது மற்றும் பலியிடுவது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், நீதிபதி நிஷா பானு, முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதியான எஸ்.ஸ்ரீமதி, மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின்போது கந்தூரி பலியிடுவது மற்றும் தொழுகை நடத்துவது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினார்.

தொழுகை நடத்தினால் கோவிலுக்குச் செல்லும் பாதை தடைபடும்!

மேலும், தர்காவில் தொழுகை நடத்துவது சமீபத்தில் தோன்றியது என்று கூறிய அவர், தொழுகைக்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையைத் தடுக்கும் என்றும், அது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மற்ற பகுதிகளை ஆக்கிரமிக்கும் என்றும் கூறினார்.

இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை அளித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இறுதித் தீர்ப்புக்காக இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பினார்.

விலங்குகளை பலியிட தடை விதித்து தீர்ப்பு

வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி, கடந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று அளித்த தீர்ப்பில், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளன என்று தீர்ப்பளித்தார். மேலும், குன்றில் பலியிடும் வழக்கம் குறித்து ஒரு தகுதிவாய்ந்த உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, எந்த ஒரு பலியிடுதல், சமைத்தல், அசைவ உணவைக் கொண்டு செல்வது, பரிமாறுவது ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.

இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தர்காவில் வழிபடும் எம்.இமாம் உசேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி வரலே அமர்வு முன் இன்று (09.02.2026) விசாரணைக்கு வந்தது.

தர்கா உள்ள பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘தர்கா உள்ள நெல்லித்தோப்பு பகுதி நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று கூறிய பிறகு, தொழுகை நடத்த கட்டுப்பாடு விதிப்பதா? தொழுகை நடத்துவதால் அந்த பகுதியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை வந்தது கிடையாது’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி அரவிந்த் குமார், சட்டம் – ஒழுங்கு பிரச்னை இருந்திருக்கவில்லை என்றால் அமைதிக் குழு கூட்டம் நடந்திருக்காது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவு சமநிலையான உத்தரவாகத் தெரிகிறது என்றும் கூறினார். மற்றொரு நீதிபதியான பி.பி.வரலே அதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, ‘‘இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *