Skip to content

“பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்!” – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் மோடி அரசை சாடிய ராகுல் காந்தி

டெல்லி,பிப்.11; மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” என அவர் ஆவேசமாக கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் ஒரு ‘சரணாகதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி, சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் செயல் என்று குறிப்பிட்டார். இது ஒரு நியாயமான ஒப்பந்தம் அல்ல, மாறாக அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்துபோன ஒரு ‘மொத்த சரணாகதி’ (Wholesale Surrender) என்று அவர் வர்ணித்தார்.

எரிசக்தி பாதுகாப்பு பறிபோகிறதா?

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) கேள்விக்குறியாகி உள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் உத்தரவுப்படி நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ராகுல் விமர்சித்தார். “நமது எரிசக்தி பாதுகாப்பு வெளிநாடுகளால் தீர்மானிக்கப்படுவது நாட்டிற்கு அவமானம்” என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளின் நலன்கள் நசுக்கப்படும் என்று ராகுல் காந்தி எச்சரித்தார். அமெரிக்காவின் பிரமாண்டமான இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் இந்திய சந்தையில் நுழைந்தால், உள்ளூர் விவசாயிகளால் அவற்றுடன் போட்டியிட முடியாது என்றும், இது இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும் வியர்வையையும் விற்பதற்கு சமம் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் தரவு மற்றும் தொழில்நுட்பம்

இந்தியர்களின் டிஜிட்டல் தரவுகள் (Data) இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலவசமாக அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். தரவு உள்ளூர்மயமாக்கல் (Data Localization) விதிகளை தளர்த்தியதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை மத்திய அரசு சமரசம் செய்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“பிரதமரின் கழுத்தை அமெரிக்கா நெரிக்கிறது”

விவாதத்தின் போது மிகவும் அதிரடியாகப் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி சாதாரண சூழ்நிலையில் நாட்டை விற்க மாட்டார் என நம்புகிறேன்; ஆனால், ஏதோ ஒரு அழுத்தம் அவரை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது; அமெரிக்கா இந்தியப் பிரதமரின் கழுத்தை நெரிக்கிறது (Choking), அவரது கண்களில் பயம் தெரிகிறது” என்று கூறி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மற்றும் அதானி விவகாரங்களைக் குறிப்பிட்டது அவையில் பெரும் கூச்சலை ஏற்படுத்தியது.

புதிய விவாதங்களை கிளப்பும் ராகுலின் ஆவேசப் பேச்சு

மக்களவையில் ராகுல் காந்தியின் இந்த ஆவேசமான பேச்சு, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. விவசாயம், ஜவுளி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *