Skip to content

அமெரிக்கா எங்களை ‘கழிவறை பேப்பர்’ போல பயன்படுத்திவிட்டு எறிந்துவிட்டது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி பேச்சு!

இஸ்லாமாபாத்,பிப்.11; பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு பல தசாப்தங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திவிட்டு, ஒரு கழிப்பறைத் தாளைப் (Toilet Paper) போல தூக்கி எறிந்துவிட்டதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

தவறான போர்களில் பங்கெடுத்த பாகிஸ்தான்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கவாஜா ஆசிப், கடந்த காலங்களில் பாகிஸ்தான் எடுத்த முடிவுகள் நாட்டை எவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன என்பதை விளக்கினார். குறிப்பாக, 1980-களில் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் தன்னை இணைத்துக் கொண்டதை அவர் ஒரு “பெரிய தவறு” என்று குறிப்பிட்டார்.

“மற்றவர்களின் போருக்காக மண்ணையும், மக்களையும் பணயம் வைத்தோம்”

“அன்று நாம் மற்றவர்களின் போருக்காக நமது மண்ணையும், மக்களையும் பணயம் வைத்தோம்; அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்ற நமது வான்வெளி, துறைமுகம் மற்றும் ராணுவத்தைப் பயன்படுத்த அனுமதித்தோம்; ஆனால், வேலை முடிந்தவுடன் அமெரிக்கா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ராணுவ ஆட்சியாளர்களின் தவறுகள்

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜெனரல் ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோரை கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்தார். இவர்கள் இருவரும் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஒரு வல்லரசு நாட்டின் நன்மதிப்பைப் பெறவும் பாகிஸ்தானைப் போரில் தள்ளியதாக அவர் சாடினார்.

மேலும், “இது மதத்திற்காகவோ அல்லது இஸ்லாத்திற்காகவோ செய்யப்பட்ட போர் அல்ல; இது ஒரு வல்லரசு நாட்டின் பாராட்டைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட பிழை; அந்தப் பிழையின் விளைவாகவே இன்று பாகிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது” என்றும் கவாஜா குறிப்பிட்டார்.

கல்வி முறையில் மாற்றம் மற்றும் தற்போதைய பாதிப்பு

பாகிஸ்தான் அந்தப் போர்களை நியாயப்படுத்த தனது கல்விப் பாடத்திட்டங்களையே மாற்றியமைத்ததாகவும், அதன் பாதிப்புகள் இன்றும் சமூகத்தில் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, மீண்டும் அமெரிக்காவின் பக்கம் பாகிஸ்தான் சாய்ந்தது மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் பாகிஸ்தான் அடைந்த இழப்புகளை ஈடுகட்டவே முடியாது என்று கூறினார்.

அமெரிக்கா உடனான உறவில் பாகிஸ்தான் வெறும் ‘கருவி’

அமெரிக்காவுடனான உறவில் பாகிஸ்தான் வெறும் ஒரு ‘கருவியாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவாஜா ஆசிப்பின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. மற்ற நாடுகளின் மோதலில் தலையிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை பாகிஸ்தான் தற்போது அனுபவித்து வரும் நிலையில், எதிர்காலத்திலாவது சுயசார்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை அந்நாடு பின்பற்றுமா என்பது கேள்விக்குறியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *