Skip to content

ஆட்சியில் பங்கா? டெல்லி ஆலோசனைக்குப் பிறகு இறங்கி வந்த காங்கிரஸ் – திமுக அதிரடி முடிவு!

சென்னை,பிப்.11; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இந்த முறை சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தனது பிடிவாதத்தை ஓரளவு தளர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: காங்கிரஸ் வைத்த கோரிக்கைகள்

கடந்த டிசம்பர் மாதமே காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச தனிக்குழுவை அமைத்தது. இந்த முறை வெறும் தொகுதிகளை மட்டும் நம்பியிருக்காமல், மேலும் சில கோரிக்கைகள் குறித்து குரல் எழுப்பத் தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 தொகுதிகள், 2 மாநிலங்களவை இடங்கள், உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் என நீண்டது காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகள்.

இந்த அடுக்கடுக்கான கோரிக்கைகளால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

டெல்லியில் நடந்தது என்ன? ராகுல் கூறிய அறிவுரை

டெல்லி சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 71 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினர். இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுக தங்களை மதிப்பதில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் தெரிவித்தனர்.

தமிழக நிர்வாகிகளின் குமுறலைக் கேட்ட மேலிடத் தலைவர்கள், “தற்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை விட, தொகுதிகளைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். எந்தச் சூழலிலும் 35 தொகுதிகளுக்குக் குறையாமல் கேட்டுப் பெறுங்கள். ஆட்சியில் பங்கு பற்றித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை

காங்கிரஸ் தரப்பு சற்று இறங்கி வந்ததைக் கேள்விப்பட்டவுடன், திமுக தலைமை சுறுசுறுப்படைந்துள்ளது. வரும் பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டாலும், தற்போதைய சூழலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உடைய வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் நிலையில், சில விட்டுக்கொடுத்தல்களுடன் வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *