Skip to content

“ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் துணிச்சல் கூட விஜய்க்கு இல்லை!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஆம்பூர்,பிப்.13; தமிழ்நாடு அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கரூர் சம்பவமும் 72 நாள் மௌனமும்

ஆம்பூரில் இன்று (13.02.206) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் நிகழ்வைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, கரூரில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்குப் பிறகு, விஜய் சுமார் 72 நாட்கள் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

2024 மக்களவை தேர்தலின்போது உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா?

மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து இபிஎஸ்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என எங்களையும், பாஜகவையும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலின்போது உரிமைத் தொகை நிறுத்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி வரும் தேர்தலில் நிறுத்த முடியும். ஒரு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனை தேர்தல் நேரத்தில் நிறுத்த முடியாது என்பதை நாடே அறியும் என்று பழனிசாமி தெரிவித்தார்.

“தோல்வி பயத்தால் ரூ.5,000 கொடுக்கின்றனர்”

2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் இந்த ரூ.5000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும், கோடை காலத்துக்காக ரூ.2000 சிறப்புத் தொகையும் கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது, அப்படியானால் 2026-ல் தேர்தல் வரும்போது மட்டும்தான் ஸ்டாலினுக்கு கோடை காலம் தெரிகிறதா?

திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாக விமர்சனம்

திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் படும் கஷ்டங்களை பார்த்து உரிமைத் தொகையை கொடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சித்தான் இந்த பணத்தை கொடுக்கின்றார், வாக்குகளைப் பெறுவதற்காக கொடுக்கின்றனர் என இபிஎஸ் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி அமைந்து 27 மாதம் கழித்துதான் கொடுத்தனர்..!

வரும் 3 மாதம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் மகளிர் கஷ்டப்படுவார்கள் என ஸ்டாலின் சொல்லியுள்ளார். 2021 தேர்தலின்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சியமைத்து 27 மாதம் கழித்துதான் உரிமைத் தொகையை வழங்கினார். நாங்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போதும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. 27 மாதம் தாமதமாக உரிமைத் தொகை பெற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *