Skip to content

பறவை காய்ச்சல் வதந்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடுஅரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்

சென்னை,பிப்.14; தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,

பறவைக் காய்ச்சில் -பின்னணி என்ன?

சமீபத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் காகங்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஒரு காகத்திற்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மக்களிடையே பரவிய அச்சத்தைப் போக்க அரசு தற்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

அச்சப்படத் தேவையில்லை: தமிழ்நாட்டில் இதுவரை மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டாம்.

பறவைகள் இறப்பு குறித்து தகவல்: உங்கள் பகுதியில் காகங்களோ அல்லது மற்ற பறவைகளோ மர்மமான முறையில் இறந்து கிடந்தால், உடனடியாக உள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கோ அல்லது கால்நடை பராமரிப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

அசைவ உணவுகள் குறித்த எச்சரிக்கை: கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து (Well-cooked) உண்ண வேண்டும். சரியான வெப்பநிலையில் சமைக்கப்பட்ட உணவுகள் மூலம் வைரஸ் பரவாது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டால்: காய்ச்சல், சளி, இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.

24 மணி நேர உதவி எண்

பறவை காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் அல்லது அவசரத் தகவல்களுக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். வதந்திகளைப் பரப்புவதும், ஆதாரமற்ற தகவல்களை நம்புவதும் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மாவட்ட வாரியாக சுகாதார அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், தனிமனித சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமும் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *