காரைக்கால்,பிப்.14; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (14.02.2026) புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் பொய் அரசியல்
பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, அரசியலில் ஒரு புதிய மற்றும் தவறான மரபைத் தொடங்கியுள்ளார்; தினமும் பொய் சொல்வதையே அவர் தனது கொள்கையாகக் கொண்டுள்ளார்; சத்தமாகப் பொய் சொல்வது, சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்வது என்பதுதான் ராகுல் காந்தியின் தற்போதைய பாணி” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், ராகுல் காந்தியின் இந்த ‘பொய் உற்பத்தி தொழிற்சாலையை’ இந்திய மக்கள் தற்போது தெளிவாக அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள் குறித்துப் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாட்டின் நலனில் காட்டும் அக்கறையை விளக்கினார்.
“சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை ஆய்வு செய்யும் போது, இந்திய விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களுக்கு பிரதமர் மோடி 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியும்; ஆனால், கடந்த காலங்களில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாயிகளின் நலன்கள் காவு கொடுக்கப்பட்டன” என்று அவர் சாடினார்.
2029 தேர்தல் வெற்றி குறித்த நம்பிக்கை
பாஜகவின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய அவர், வரும் 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமித்ஷா பேச்சு!
அமித்ஷாவின் இந்த காரைக்கால் பயணம் மற்றும் ராகுல் காந்தி மீதான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வர்த்தக ஒப்பந்தங்களில் விவசாயிகளின் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
