Skip to content

அரசியல் மேடைகளில் கார்ப்பரேட் கலாச்சாரம்: தமிழ்நாடு அரசியலின் புதிய முகம்!

சென்னை,பிப்.17; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது கொள்கை பரப்புதலில் மட்டுமல்லாது, கூட்டங்களை நடத்தும் விதத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுவருகிறது. பழைய காலத்து பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்திலிருந்து இன்று ‘ரேம்ப் வாக்’ (Ramp Walk) மேடைகள் வரை அரசியல் மேடைகளின் பரிணாம வளர்ச்சி வியக்க வைக்கிறது.

மேடை நாகரிகத்தின் பரிணாமம்

மேடை நாகரிகம்…மேடை நாகரிகம் என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வார்கள். அனைவருக்கும் அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இப்போது, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகள் நவீன வடிவத்துடன் நாகரிகமாக மாறி வருகின்றன.

ஒரு காலத்தில் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் ஒரே ஒரு மைக் நின்று கொண்டிருக்க, அதற்கு முன்னால் நின்று உரத்த குரலில் பேசுவது தான் மேடைப்பேச்சு. அதன் பிறகான காலத்தில், நான்கைந்து பெஞ்சுகளை போட்டு அதன்மேல் ஏறி நின்று பேசுவார்கள். அதற்குப் பிறகு, வாகனங்களை நிறுத்தி அதன் மேல் ஏறி நின்று பேசினார்கள். இத்தனைக்கும் பிறகுதான் ஒரு நிலையான மேடை அமைந்தது. கூட்டத்தில் பேசவரும் முக்கிய தலைவர் மேடையின் பின்புற வழியாக வந்து மேடையில் ஏறி பேசிவிட்டு அது வழியாகவே இறங்கிச் சென்று விடுவார்.

முன்னோடியாகத் திகழ்ந்த கட்சிகள்

தமிழ்நாடு அரசியலில் இந்த நவீன ‘கார்ப்பரேட்’ பாணி மேடைகளை அறிமுகப்படுத்தியதில் பாமக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே வண்டலூர் மாநாட்டில் காலர் மைக் மற்றும் தலைவர்கள் நடந்து சென்று பேசும் நீண்ட மேடைகளை அவர்கள் பயன்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, திமுக தனது பொதுக்கூட்டங்களை மிகவும் பிரமாண்டமாகவும் தொழில்நுட்ப வசதிகளுடனும் மாற்றியது. 2021 தேர்தலுக்கு முன்பே ‘தமிழக விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகைய நவீன மேடைகளைப் பயன்படுத்தினார். தற்போது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) போன்ற புதிய கட்சிகளும் தங்களது முதல் மாநாட்டிலேயே இத்தகைய உலகத்தரம் வாய்ந்த மேடை அமைப்புகளைப் பயன்படுத்தி கவனம் ஈர்த்துள்ளன.

தொண்டர்களுடன் நெருக்கமான தொடர்பு

இன்றைய நவீன மேடைகளின் சிறப்பம்சமே, தலைவர் மேடையின் மையப்பகுதியில் மட்டும் நிற்காமல், தொண்டர்களுக்கு மிக அருகில் ‘ரேம்ப்’ வழியாக நடந்து சென்று கைகுலுக்குவதும், கையசைப்பதும்தான். இது தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.

சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள்

மேடைகள் மட்டுமல்லாது, தொண்டர்கள் அமரும் இடமும் இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கருத்தரங்கம் போல மாற்றப்பட்டுள்ளது:

பாதுகாப்பான தடுப்புகள்: கூட்ட நெரிசலைத் தவிர்க்க 500 பேர் வீதம் அமரக்கூடிய தனித்தனி பிளாக்குகள்.

உணவு உபசரிப்பு: தொண்டர்கள் பசியின்றி இருக்க இருக்கைகளிலேயே பிரியாணி பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் முன்கூட்டியே வைக்கப்படுகின்றன.

தொழில்நுட்பம்: உயர்தரமான ஒலி அமைப்புகள் மற்றும் பிரமாண்ட எல்.இ.டி (LED) திரைகள்.

கட்சிகள் கார்ப்பரேட் பாணிக்கு வருவது காலத்தின் கட்டாயம்

அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் பாணிக்கு மாறுவது என்பது காலத்தின் கட்டாயம். வெறும் பேச்சால் மட்டும் மக்களைக் கவர முடியாது என்ற நிலையில், காட்சிப்பூர்வமான பிரமாண்டமும், தொண்டர்களுக்கான வசதிகளும் இன்று அவசியமாகிவிட்டன. இந்த நவீன மாற்றம் தமிழ்நாடு அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *