சென்னை,பிப்.21; சென்னையின் வீதியோரங்களில் இஸ்திரி தொழில் செய்யும் தொழிலாளர்கள், நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த நிலக்கரிப் பெட்டிகளை விடுத்து, தற்போது நவீன எல்பிஜி (LPG) எரிவாயு மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டிகளுக்கு மாறி வருகின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரியிலிருந்து எரிவாயுவுக்கு மாற்றம் ஏன்?
வழக்கமான நிலக்கரி இஸ்திரி பெட்டிகளைப் பயன்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நிலக்கரியைப் பற்றவைக்க அதிக நேரம் எடுக்கும், அதிலிருந்து வரும் புகை நுரையீரலைப் பாதிக்கும், மேலும் துணிகளில் சாம்பல் படிந்து அழுக்காக வாய்ப்புள்ளது. ஆனால், எல்பிஜி இஸ்திரி பெட்டிகள் இந்தச் சிரமங்களைக் குறைத்துள்ளன.
ஆரம்பத்தில் எல்பிஜி பெட்டிக்கு மாற பயந்ததாக சில இஸ்திரி தொழிலாளர்கள் கூறினர். ஆனால், காலப்போக்கில் அது மிகவும் வசதியாக இருப்பதை உணர்ந்தோம்- மின்சாரப் பெட்டிகளை வீதியோரக் கடைகளில் பயன்படுத்துவது கடினம் – ஆனால், எல்பிஜி பெட்டி தங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு ஒரு அருட்கொடை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
குறைந்த செலவு மற்றும் அதிக லாபம்
நிலக்கரி பெட்டிக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும்; ஆனால் எல்பிஜி எரிபொருளுக்கு 50 ரூபாய் மட்டுமே செலவாகிறது; வெப்பத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதால், பட்டுப் போன்ற மென்மையான துணிகளை மிக எளிதாக இஸ்திரி செய்ய முடிகிறது என்றும் சில இஸ்திரி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
‘உத்யம்’ அமைப்பின் பங்களிப்பு
பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த ‘உத்யம் லேர்னிங் ஃபவுண்டேஷன்’ (Udhyam Learning Foundation) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் 50% மானிய விலையில் தொழிலாளர்களுக்கு எல்பிஜி பெட்டிகளை வழங்குகின்றனர். இதன் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மைகள்:
எரிபொருள் செலவில் 50% சேமிப்பு.
வேலை நேரம் குறைந்து, உற்பத்தித் திறன் 25% அதிகரிப்பு.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது (கார்பன் வெளியேற்றம் குறைவு).
ஆரோக்கியமான பணிச்சூழல்.
நவீன தொழில்நுட்பத்தை ஏற்றதால் உழைப்பு எளிதானது
சென்னையின் இஸ்திரி தொழிலாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் தொழில்துறை மாற்றம் மட்டுமல்ல; அது அவர்களின் உழைப்பை எளிதாக்கி, வருமானத்தை உயர்த்தி, கௌரவமான வாழ்வை அளிக்கும் ஒரு முன்னெடுப்பாகும். அரசு இதற்கு கூடுதல் மானியம் வழங்கினால், எஞ்சியுள்ள தொழிலாளர்களும் இந்த ஆரோக்கியமான மாற்றத்திற்கு விரைவாக மாறுவார்கள்.
