அகமதாபாத்,பிப்.23; டி20 உலகக் கோப்பையில் நேற்று இந்திய-தென்னாப்பிரிக்கா இடையிலான சூப்பர் 8 சுற்றுப்போட்டியைக் காண அகமதாபாத் மைதானத்தில் திரண்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களின் ஆரவாரம், ஒரு சில மணிநேரங்களில் அடங்கிப் போனது. இந்தியா தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியபோது, 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் நினைவுகளை மீண்டும் கிளறும் வகையில் அமைந்திருந்தது.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி மீட்சி (Recovery)
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, ஆரம்பத்தில் தடுமாறியது. இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்தில் 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரக் கூச்சலெழுப்பி, இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் 20/3-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா மடியத் தயாராக இல்லை. இந்திய அணி கேப்டன் சூரியகுமார் அதோடு தென் ஆப்பிரிக்காவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நினைத்து வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு வந்தார். ஆனால் டேவிட் மில்லர் வேறு திட்டங்களை அவருக்காகவும் தனக்காகவும் வைத்திருந்ததோடு ஒரு மூத்த வீரராக இளம் புலி டெவால்ட் பிரெவிஸை அருமையாக வழிநடத்தினார். இந்திய அணியில் அத்தகைய வழிநடத்தும் வீரர்கள், அதாவது விராட் கோலி, ரோகித், ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் இல்லை.
வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள தென்ஆப்ரிக்கா தயாராக இருந்தது!
வருண் சக்ரவர்த்தி பற்றி தென் ஆப்பிரிக்கா அணி நிர்வாகம் முழு நேர விவாதம் செய்து உத்திகளை வகுத்திருந்தது. வருண் சக்ரவர்த்தியை அவர்கள் ஆடிய விதம் அவரை வெறும் கூக்ளி பவுலராக மாற்றியது.
அனுபவ வீரர் டேவிட் மில்லர் மற்றும் இளம் புயல் டெவால்ட் ப்ரீவிஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மில்லர் வெறும் 26 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். மறுபுறம் ப்ரீவிஸ் தனது அதிரடியால் இந்திய பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். குறிப்பாக, ஹர்திக் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விளாசிய 20 ரன்கள், தென்னாப்பிரிக்காவை 187 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்ட வைத்தது.
ஒவ்வொரு ஆட்டத்திற்கும் எதிராக ஒரு வீரர் ஜொலித்ததால் வெற்றி வசமானது
அமெரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார், நமீபியாவுக்கு எதிராக இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷனின் அசாதாரணத் தொடக்கம், நெதர்லாந்துக்கு எதிராக ஷிவம் துபே என்று தனிப்பட்ட வீரர்களின் பங்களிப்பினால் நல்ல இலக்கை நிர்ணயிக்க முடிந்ததே தவிர மிடில் ஓவர்களுக்கான அணியின் திட்டம் என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட திட்டமின்மை நேற்று (22.02.2026) அப்பட்டமாகத் தெரிந்தது.
இந்திய வீரர்களை குழப்பிய லுங்கி இங்கிடி !
லுங்கி இங்கிடி நேற்று அற்புதமாக ஸ்லோயர் ஒன் பந்துகளை தெரியாதபடிக்கு வீசி இந்திய வீரர்களை குழப்பி விட்டார். இந்திய அணியின் பேட்டிங் சரிவில் லுங்கி இங்கிடியின் பந்து வீச்சு பெரிய பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் மார்க்ரமை வீச வைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாக இருந்தும் இந்திய டாப் ஆர்டர் அவருக்கு எதிராக எந்த வித அர்த்தமுள்ள உத்திகளையும் வகுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் வலுவானது, அவர்கள் இந்திய மிடில் ஆர்டர் அணுகுமுறையை விட சிறப்பாக ஆடினர். இந்த உலகக்கோப்பைக்கு முன்னால் இந்தியா ஆடிய (Pitch) ஆடுகளங்கள் கட்டாந்தரை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்தத் தொடரிலேயே எடுத்துக் கொண்டால் பவர் ப்ளேவுக்குப் பிறகு இந்திய அணி மந்தமடைந்ததைத்தான் பார்த்து வருகிறோம்.
பாண்ட்யா ஆட்டமிழந்ததும் பெரும்கூட்டம் மைதானத்தை விட்டு வெளியேறியது
நேற்றைய ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா 15வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் பெரும் கூட்டம் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
காரணம் திட்டமிடலில் கோளாறு, அணுகுமுறையில் அலட்சியம், அணித்தேர்வில் திமிர் போன்றவற்றால் இந்திய அணி தாறுமாறான தோல்வியைச் சந்தித்தது. நேற்று 80-85 ஆயிரம் ரசிகர்கள் தென் ஆப்பிரிக்கா பவர் ப்ளேயில் 20/3 என்று ஆனவுடன் வீறு கொண்ட குரல்வளையின் ஸ்தாயியை உயர்த்தினர். ஆனால் அதே இந்தியா பேட் செய்த போது அதே பவர் ப்ளேயில் அசாத்திய மவுனத்திற்குள் தள்ளப்பட்டனர்.
பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி
188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர். பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து துல்லியமாகப் பந்து வீசினர். இந்தியாவின் அதிரடி மன்னன் சிவம் துபே 42 ரன்கள் எடுத்து ஓரளவிற்குப் போராடினாலும், மற்ற வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. இறுதியில் இந்தியா 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தனது மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது.
அகமதாபாத் மைதானமும் சைலென்ஸ் மோடுககுச் சென்ற இந்திய ரசிகர்கள்
அகமதாபாத் மைதானமும் ‘சைலன்ஸ்’ மோடுக்கு சென்ற ரசிகர்களும்
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தியது போலவே, தற்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் அகமதாபாத் மைதானத்தை நிசப்தமாக்கியுள்ளனர். இந்தியாவின் பலமான ஸ்பின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாவகமாக கையாண்டதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
