Skip to content

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

சென்னை,பிப்.23; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி ரீதியிலான தாக்குதல்கள் மற்றும் திமுகவினரின் அராஜகப் போக்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் தொடரும் அராஜகங்கள்

2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், ஆளும் கட்சியினரும் சமூக விரோதிகளும் தங்களுக்குக் கிடைத்த ‘லைசென்ஸ்’ போல அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் திமுகவினர் செயல்படுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி வன்முறை சம்பவங்கள்

சமீபத்தில் ஒசூரில் அரசு ஊழியர் சிவமூர்த்தி என்பவர் திமுக நிர்வாகியின் மகனால் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் மகனின் தூண்டுதலால் நடந்த மோதலில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தகைய தொடர் வன்முறைகள் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வெறி தாக்குதல்களும் அரசின் மெத்தனப்போக்கும்

பள்ளி மாணவர்கள் மத்தியிலும் சாதி ரீதியிலான காழ்ப்புணர்ச்சி அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது. சக மாணவர்கள் மீதே சாதி வெறியில் தாக்குதல் நடத்தும் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் மீதான புகார்கள் முதல் போதைப்பொருள் கடத்தல் வழக்கு வரை, திமுக நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தாலும் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிர்வாகத் தோல்வியும் ஊழல் புகார்களும்

விவசாயிகள் நலம், பெண்கள் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சி தோல்வியடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2ஜி ஊழல் தொடங்கி, தற்போதைய மணல் கடத்தல் மற்றும் மதுபான முறைகேடுகள் வரை திமுக அரசு மக்கள் விரோத அரசாகச் செயல்பட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.

அரசின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பதாக கருத்து

தமிழக மக்கள் தற்போதைய அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *