சென்னை,பிப்.24: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக தொண்டர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை இன்று (24.02.2026) காலை முதலே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள்; அதிமுகவினருக்கு இபிஎஸ் கடிதம்
இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நம் உள்ளங்களிலும், தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கிறார்; அவரது பொற்கால ஆட்சியில், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஏராளம்!
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் தனது தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம், ஏராளம். ஜெயலலிதாவுக்குப் பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது. திமுக அரசு பெண் கல்வி, பெண் விடுதலை,பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திய ஜெயலலிதா, பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் இந்த திமுக அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக உரிமைகளை காக்க திமுக தவறிவிட்டது: இபிஎஸ்
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், இந்த திமுக அரசு தமிழக உரிமைகளைக் காப்பாற்றவும், இருமொழிக் கொள்கையை நிலைநாட்டிடவும், திறனற்ற அரசாக இருந்துகொண்டிருக்கிறது. இந்த அலங்கோல ஆட்சியில் நாள்தோறும் தமிழகத்தில் பெண்குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பெண் காவலர்களுக்கும்கூட பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.
அதிமுக ஆட்சி மலர வேண்டும் இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ வேண்டும், தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
