Skip to content

சுட்டுக் கொல்லப்பட்ட ‘எல் மெஞ்சோ’; உலகின் மிக பயங்கரமான தேடப்படும் குற்றவாளியாக மாறியது எப்படி?

மெக்சிகோவின் நிழல் உலகத்தை நடுங்க வைத்த ஒரு பெயர் ‘எல் மெஞ்சோ’ (El Mencho). நேற்று முன்தினம் (பிப்ரவரி 22, 2026) மெக்சிகோ பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இவரைப் பற்றியும், அவர் ஏன் உலகின் மிக ஆபத்தான நபராகக் கருதப்பட்டார் என்பது குறித்தும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு சாதாரண விவசாயி முதல் போதைப்பொருள் மன்னன் வரை…!

நெமெசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வான்டெஸ் (Nemesio Rubén Oseguera Cervantes) என்ற இயற்பெயர் கொண்ட எல் மெஞ்சோ, ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் அவகேடோ தோட்டங்களில் வேலை செய்த இவர், பின்னர் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தார். அங்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறை சென்ற அவர், மீண்டும் மெக்சிகோவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG) உருவாக்கம்

மெக்சிகோ திரும்பிய எல் மெஞ்சோ, சிறிது காலம் காவல்துறையில் பணியாற்றியது பலரும் அறியாத உண்மை. ஆனால், விரைவில் குற்ற உலகிற்குத் திரும்பிய அவர், 2009-ல் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு மிகக்குறுகிய காலத்தில் மெக்சிகோவின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது.

ஏன் அவர் ‘மோஸ்ட் வான்டட்’ மனிதரானார்?

எல் மெஞ்சோ உலகின் மிகத் தேடப்படும் மனிதராக மாறியதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன:

அதீத வன்முறை: எதிரிகளைப் பயமுறுத்த தலை துண்டிப்பு மற்றும் பொது இடங்களில் உடல்களைத் தொங்கவிடுதல் போன்ற கொடூரமான செயல்களில் இவரது குழு ஈடுபட்டது.

ராணுவ ரீதியான பலம்: 2015-ல் மெக்சிகோ ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்திய துணிச்சல் இவரது கார்டெலுக்கு உண்டு.

உலகளாவிய தொடர்பு: அமெரிக்கா மட்டுமல்லாது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா வரை தனது போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை இவர் விரிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் பரிசு: அமெரிக்காவின் DEA அமைப்பு இவரைப் பிடிக்க 15 மில்லியன் டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) வெகுமதி அறிவித்திருந்தது.

இறுதி வேட்டை மற்றும் தற்போதைய சூழல்

பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த எல் மெஞ்சோ, இறுதியாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜாலிஸ்கோ மாநிலத்தின் மலைப்பகுதியில் நடந்த அதிரடி ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு மெக்சிகோவில் பெரும் வன்முறை வெடித்தது, இது அவர் எந்தளவுக்கு அதிகாரத்துடன் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

எல் மஞ்சோ வீழ்த்தப்பட்டது போதைப்பொருள் போரில் ஒரு மைல்கல்

எல் மெஞ்சோவின் வீழ்ச்சி மெக்சிகோவின் போதைப்பொருள் போரில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இருப்பினும், ஒரு தலைவர் மறைந்தாலும் அந்த அமைப்புகள் முற்றிலும் அழியாது என்பதால், சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் விழிப்புடனேயே உள்ளன. வன்முறையாலும் குற்றங்களாலும் ஒரு பேரரசை உருவாக்கினாலும், அதன் முடிவு எப்போதும் இதுபோன்றுதான் அமையும் என்பதற்கு எல் மென்சோ ஒரு சாட்சி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *