சென்னை,பிப்.26; கட்சி சாலை வலம் (Road Show) நிகழ்ச்சிகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழ்நாடு அரசு, ஜனவரி 5-ஆம் தேதி அரசிதழில் அதை வெளியிட்டது.
வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தவெக தொடுத்த வழக்கு
இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று (பிப்ரவரி 26) விசாரணைக்கு வந்தபோது, ‘பொதுக் கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது; அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது; நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன’ என த.வெ.க. தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரி விலக்குபெற கட்சிகள் தொடங்கப்படுகின்றன-நீதிபதிகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது? கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன; வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல தொடங்கப்படுகின்றன; அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை; பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்பி – எம்எல்ஏக்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?’ எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், தவெக எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது-அரசுத் தரப்பு
அரசுத் தரப்பில், ‘இந்த வழிகாட்டி வழிமுறைகளை பின்பற்றி தவெக இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது; இந்த நிபந்தனைகளின்படி 5000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்கள் எனக் கூறி விண்ணப்பிக்கின்றனர்.
ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது; இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது’ என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன
மேலும், ‘பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது; சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகுதான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத் தரப்பை கேட்ட நீதிபதிகள், தவெக மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
