Skip to content

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; இபிஎஸ்-க்கு வெற்றியே கிடையாது: திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து


சென்னை,பிப்.27; அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன்: ஓபிஎஸ்

திமுகவில் இணைந்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா தொடங்கிய தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன்; அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனும் சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார்; ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

“அரசியல் இலக்கணத்தோடு கட்சியை நடத்துகிறார் ஸ்டாலின்”

ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார்; முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது; அடித்தட்டு, ஏழை எளியவர்கள், பெண்கள் மன மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியில் உள்ளனர்; அண்ணா, கருணாநிதி எப்படி அனைத்து கட்சிகளையும் தாயுள்ளத்தோடு சட்டப்பேரவையில் அணுகினார்களோ, அதே பாணியில் முதலமைச்சர் ஸ்டாலினும் செயல்படுகிறார் என்று ஓபிஎஸ் புகழ்ந்தார்.

“தென்மாவட்டங்களில் யாரும் வளரக்கூடாது என இபிஎஸ் நினைக்கிறார்”

எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை; தென்மாவட்டங்களில் எந்தவொரு தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்; அவ்வாறு அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவர்களை பழனிசாமி அழித்து வருகிறார்;

பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது என்று ஓபிஎஸ் கடுமையாகச் சாடினார்.
கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன்; அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை; அதனால் எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன்; வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “முன்னாள் முதல்வரும், அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்; அவரை வருக வருக என வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *