Skip to content

திமுக கூட்டணியில் சலசலப்பு; 12 தொகுதிகள் கேட்ட மதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்!


சென்னை,மார்ச்.02; தமிழ்நாடு சட்டப்பேரைவத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீராத தலைவராக உருவெடுத்துள்ளது. இதில் திமுக மற்றும் மதிமுக இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுகவின் எதிர்பார்ப்பும் திமுகவின் பதிலும்

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்த்தது. குறிப்பாக, மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
ஆனால், திமுக தலைமை இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை. திமுக தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதில் மதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிபந்தனைகளும் தொகுதி எண்ணிக்கையும்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகள் வருமாறு:

உதயசூரியன் சின்னம்: திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் ஒதுக்கப்படும்.

தனிச் சின்னம்: மதிமுக தனது சொந்த அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பினால், வெறும் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும்.

மாநிலங்களவை சீட்: தற்போதைய சூழலில் மாநிலங்களவை சீட் வழங்க முடியாது என்று திமுக கறாராகத் தெரிவித்துவிட்டது.

வைகோவின் அதிருப்தியும் சந்திப்பும்

தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் வைகோ, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கடந்த காலங்களில் துரை வைகோ அவர்கள் சின்னம் தொடர்பாக மேடையில் கண்ணீர் மல்கப் பேசியது குறிப்பிடத்தக்கது. பம்பரம் சின்னம் கிடைப்பதில் உள்ள சிக்கல்களுக்குப் பிறகு, தொகுதி எண்ணிக்கையிலும் குறைப்பு செய்யப்படுவது மதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னம் குறித்த சிக்கல்

கடந்த தேர்தல்களில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை தனித்துவத்தை நிலைநாட்டத் துடிக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் சின்னம் ஒதுக்கீட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மதிமுகவிற்கு சவாலாக உள்ளன. திமுகவோ தங்களது சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கூடுதல் இடங்கள் என்பதில் உறுதியாக உள்ளது.

திமுக கூட்டணியில் நீடிக்குமா மதிமுக?

தற்போது வரை திமுக கூட்டணியிலேயே மதிமுக நீடித்தாலும், தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த இழுபறி கூட்டணியின் வலிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. வைகோவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *