Skip to content

மேற்கு ஆசியாவில் பதற்றம்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!


டெல்லி,மார்ச்.02; மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வரும் மிக மோசமான சூழல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். ஈரான் மீதான தாக்குதல் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே இந்த முக்கிய உரையாடல் நடைபெற்றுள்ளது.

மோதல் போக்கை கைவிட பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்த உரையாடலின் போது, தற்போதைய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இந்தியா கொண்டுள்ள ஆழ்ந்த கவலைகளை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். “பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினேன்; சமீபத்திய மாற்றங்கள் குறித்து இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்,” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வன்முறையைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலும் தற்போதைய நிலையும்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் பிற அண்டை நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், பிராந்திய அமைதியைக் காக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரக மன்னருடன் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார். அமீரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த மோடி, இக்கட்டான இக்காலத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் துணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலை

மேற்கு ஆசியாவில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். போர்ச் சூழல் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளதால், துபாய் மற்றும் தோகா போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு (CCS) ஏற்கனவே அவசர ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆசிய போர்ச்சூழல் இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தையும், இந்தியாவின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கவும், பிராந்திய நிலைத்தன்மையை மீட்கவும் உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *