டெல்லி,மார்ச்.03; ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் மௌனம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சர்வதேச விதிகளின் மீறல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அயதுல்லா அலி கமேனி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் தலைவரை இத்தகைய முறையில் இலக்கு வைத்துப் படுகொலை செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை (Article 2 (4)) மீறும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமேனி படுகொலை-இந்தியாவின் மௌனம் ஏன்?
“சர்வதேச ஒழுங்குமுறை சீர்குலைக்கப்படும் போது இந்தியா மௌனம் காப்பது நடுநிலைத் தன்மை கிடையாது; இது நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது” என்று சோனியா காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்துத் திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்தப் படுகொலை நடந்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்
முன்பெல்லாம் இந்தியா அமைதி, இறையாண்மை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. ஆனால், தற்போது பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கு (Global South) நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் நிலையில், இந்தியா மட்டும் மௌனம் காப்பது கவலையளிப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது இது குறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மௌனம் என்பது எப்போதும் பாதுகாப்பானது அல்ல, சில நேரங்களில் அது அநீதிக்குத் துணை போவதாக அமைந்துவிடும் என்பதே சோனியா காந்தி கருத்தின் மையமாகும். இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையான ‘அணிசேரா கொள்கை’ மற்றும் ‘அமைதி வழித் தீர்வு’ ஆகியவற்றிலிருந்து தற்போதைய அரசு விலகிச் செல்கிறதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
