Skip to content

நாங்குநேரி இரட்டை கொலை; “திமுக அரசின் அலட்சியமே காரணம்” – எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கடும் கண்டனம்!

நாங்குநேரி,மார்ச்.02; நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கஞ்சா போதையில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் 2 பேர் வெட்டிக்கொலை; 6 பேர் காயம்

கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். பின்னர், நாங்குநேரி பெரும்பத்து பகுதியை வந்தடைந்த அவர்கள், அங்குள்ள தேநீர் கடையில் பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிகிறது. மேலும், அங்கு கூடியிருந்தவர்களை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

காவல்துறை தீவிர விசாரணை; 6 பேர் கைது

இதில், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான், செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, சசிகுமார், கணேசன் உள்ளிட்ட 6 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, 6 பேரை கைது செய்துள்ளனர்.

இரட்டை கொலையைக் கண்டித்து இபிஎஸ் அறிக்கை

இதனிடையே, இரட்டைக் கொலையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பத்து கிராமத்தில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் மிகவும் கொடூரமானது மற்றும் ஏற்க முடியாத ஒரு பெருங்குற்றமாகும் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

வெறும் விளம்பர அரசியலில் ஈடுபடும் திமுக அரசு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல், திமுக அரசு வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த அலட்சிய போக்கின் விளைவே இதுபோன்ற தொடர் கொலைகள் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தென் மாவட்டங்களில் அவ்வப்போது நிகழும் சமூக ரீதியான மோதல்களைத் தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தென் பகுதியை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணமா? மேடைகளில் மட்டும் ‘சமத்துவம்’ என்று பேசும் திமுக, உண்மையில் மோதல்கள் நடக்கும்போது வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அப்பாவி மக்களின் உயிருக்குகூட பாதுகாப்பில்லை: அன்புமணி

இதேபோன்று நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

அப்பாவி மக்களின் உயிர்களுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் துப்பற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பதாகவும் அன்புமணி சாடியுள்ளார்.

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம், அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு, தென் மாவட்டங்களில் அமைதியை நிலைநாட்ட அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *