தேனி,மார்ச்.04; முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அவரது சொந்த மாவட்டமான தேனியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஓபிஎஸ்-ன் செயலால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அவரது இந்த முடிவு அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்; சமூகவலைதளங்களில் கடும் வசை
தீயசக்தி என்று எம்ஜிஆரால் அடையாளப்படுத்தப்பட்ட திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.
இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதற்கு, பன்னீர்செல்வம் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருக்கலாம் என்கிற ரீதியில் எல்லாம் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
ஓபிஎஸ் அரசியலில் இருந்து விலகியிருக்கலாம் எனவும் கருத்து
அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு அமைப்பை தொடர்ந்து நடத்தி சட்டரீதியான போராட்டங்களை தொடர்ந்திருக்கலாம் என்றெல்லாம் பேச்சு கிளம்பியது.
மற்ற பகுதிகளில் எப்படியோ, ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
தாய்க்கழகமான அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
காலம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அந்தக் கட்சியிலே பன்னீர்செல்வம் இணைந்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக க.மயிலை ஒன்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு கடமலைக்குண்டுவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை வகிக்க, தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்எம்.ராமர் முன்னிலை வகித்தார்.
தேனியில் ஓபிஎஸ் ஆதரவு கூடாரம் காலியாகிறது!
இதில் க.மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி அதிமுகவில் இணைந்தனர். குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் விலகியதால் இப்பகுதியில் ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலியாகி உள்ளது.
