சென்னை,மார்ச்.04; தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படுவது வழக்கம்.
திருச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கர்த்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.
ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு இந்தியில் பெயர்; கடும் எதிர்ப்பு
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே நிர்வாகம் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திப் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின்,சு.வெங்கடேசன் பதிவு
இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மயிலிறகால் வருடிக் கொடுப்பது போன்று தமிழிசை பதிவு
இதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள ஒரு பதிவில், மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் தயவுசெய்து திருச்சி ரெயில் நுழைவ வாயிலுக்கு தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். ஏனெனில் சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி” என குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழில் பெயர்சூட்டுக: மத்திய அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மீது மத்திய அரசுக்கு உள்ள பற்றை மக்கள் அறிவர்
இதற்கான எதிர்ப்புக் குரல்களுக்கு மதிப்பளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன என்றும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் கண்டனம்
இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு வெளிப்பாடாகும் என்று விமர்சித்துள்ளார்.
“நிர்வாகம் என்பது மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும்”
ஒரு ஜனநாயக நாட்டில் நிர்வாகம் என்பது மக்கள் பேசும் மொழியிலேயே அமைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்திற்கு இந்தச் செயல் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தற்போது ‘மொழி ஒன்று…வரி வடிவம் மூன்று’ என்ற புதிய தந்திரத்தை கையாண்டு வருவதாக முபாரக் சாடியுள்ளார். அதாவது இந்திச் சொற்களையே தமிழ் மற்றும் ஆங்கில வரி வடிவங்களில் எழுதிவைத்து, அது எல்லா மொழிகளிலும் இருப்பதாக ஒரு மாயை உருவாக்குகிறது எனவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
