கொல்கத்தா,மார்ச்.06; மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.வி. ஆனந்த போஸின் திடீர் முடிவு
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்ற சி.வி. ஆனந்த போஸ், சுமார் மூன்றரை ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார். இந்நிலையில், டெல்லியில் இருந்தபடி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளார். “ஆளுநர் பதவியில் போதுமான காலம் பணியாற்றிவிட்டேன், அது எனக்குப் போதும்” என்று தனது ராஜினாமா குறித்து அவர் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கடும் அதிர்ச்சி
ஆளுநரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளார் பதிவில், “ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் பதவி விலகல் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்; வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த பதவி விலகல் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.என். ரவி நியமனம் – கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது?
தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, தன்னை ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அமித் ஷா தன்னிடம் தகவலை மட்டுமே தெரிவித்ததாகவும், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் ஆளுநரை நியமிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் மாற்றம்; அரசியல் வட்டாரத்தில் விவாதம்!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுநர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த ஆர்.என். ரவி, இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுடன் எப்படிச் செயல்படப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
