பாட்னா, மார்ச்.07; பீகார் அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தொடங்கியுள்ளார். அவர் மாநிலங்களவைக்குச் செல்வததால், அவரது மகன் நிஷாந்த் குமார் அரசியலில் குதிக்க உள்ளார்.
உணர்ச்சிவசப்பட்ட நிதிஷ் குமார்; தொண்டர்களுக்கு உறுதி
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஐக்கிய ஜனதா தள (JD-U) தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், “நான் உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன்; இங்கேயே இருந்து பீகாரின் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக பீகாரின் முகமாக இருந்த நிதிஷ் குமார், தேசிய அரசியலுக்கு நகர்ந்தாலும் மாநிலத்தின் மீது ஒரு கண் வைத்திருப்பார் என்பதை இந்த உறுதிமொழி காட்டுகிறது.
நிஷாந்த் குமாரின் அரசியல் வருகை
இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அறிவிப்பாக, நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரும் நாளை (மார்ச் 8, ஞாயிறு) முறைப்படி ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைய உள்ளார். கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா முன்மொழிந்த இந்த முடிவுக்கு கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
நிஷாந்த் குமார் கட்சியில் இணைந்த பிறகு, மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். “நிஷாந்த் குமார் கட்சியின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வார்” என்று மத்திய அமைச்சர் லாலன் சிங் மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஆட்சி மாற்றம்?
நிதிஷ் குமார் மாநிலங்களவைக்குச் செல்வதால், பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய தகவல்படி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நிஷாந்த் குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற யூகங்களும் அரசியல் வட்டாரத்தில் உலவுகின்றன.
குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறிய நிதிஷ் குமார்….!
நிதிஷ் குமாரின் இந்த அதிரடி மாற்றங்கள் பீகார் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறிவந்த நிதிஷ் குமார், தற்போது தனது மகனை அரசியலில் முன்னிறுத்துவது விமர்சனங்களையும் அதே சமயம் கட்சிக்குள் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாளை நிஷாந்த் குமார் கட்சியில் இணைவது, JD(U) கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
