சென்னை,மார்ச்.10; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணியை உறுதிப்படுத்துவதிலும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்வதிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக குறைந்த இடங்களிலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சுமார் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 22 முதல் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், ஏற்கனவே சில கட்சிகளுக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன:
காங்கிரஸ்: 28 தொகுதிகள்
முஸ்லீம் லீக் & மமக: தலா 2 தொகுதிகள்
தேமுதிக: 10 தொகுதிகள் (கிடைத்த தகவல் படி)
கொமதேக & மக்கள் நீதி மய்யம்: தலா 2 தொகுதிகள்
இழுபறியும் தீர்வும்: விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
தொடக்கத்தில் கூடுதல் இடங்கள் கேட்டு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதம் காட்டிய நிலையில், தற்போது சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 இடங்களும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு தலா 4 இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக எத்தனை இடங்களில் போட்டியிடும்?
கடந்த 2021 தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை புதிய கூட்டணிக் கட்சிகளின் வருகையாலும், தோழமை கட்சிகளின் கோரிக்கையாலும் திமுக 160 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் மொத்தம் 175 இடங்கள் வரை வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் எனத் தெரிகிறது.
நாளை முக்கிய அறிவிப்பு ஏன்?
திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை (மார்ச் 11,புதன்) நடைபெற உள்ளது. அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், அதே நாளில் கூட்டணி ஒப்பந்தங்களை முழுமையாக முடித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துச் செல்லும் திமுக
கூட்டணி தர்மத்திற்காகவும், வெற்றியை உறுதி செய்யவும் திமுக இந்த முறை விட்டுக்கொடுத்துச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மார்ச் 11-க்குள் அனைத்து குழப்பங்களுக்கும் விடை கிடைத்து, திமுக கூட்டணியின் இறுதிப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
