சென்னை,மார்ச்.11; அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெகவை இணைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
50 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் கூட விஜய் தரப்பிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன.
கொள்கை எதிரி என முழங்கிவிட்டு பாஜகவுடன் எப்படி கூட்டணி?
ஆனால், தவெக தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கொள்கை எதிரி என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது அந்தக் கட்சியுடன் எப்படி கூட்டணி வைத்துக்கொள்வது? என தவெக தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
இதுபோன்ற சூழலில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில் நேற்று (மார்ச் 10, செவ்வாய்) சாட்சியம் அளித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தவெக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
டீயும் காபியும் ஒன்றாக கலக்காது: அண்ணாமலை பதில்
அதற்கு அவர், விஜய் கட்சியுடன் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.”என்னைப் பொறுத்தவரை “டீயும் காபியும் ஒன்றாகக் கலக்காது” – ஏனென்றால், சித்தாந்தங்கள் வேறானவை; தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது எனப் பதிலளித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பாஜகவுக்கும், தனக்கும் தொடர்பிருப்பதாக அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்றைக்கு (மார்ச் 10) சாட்சியம் அளித்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.
“டிஆர் பாலு மீது புதிய அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன்”
இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்காததாலும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்காததாலும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீதிமன்ற விசாரணையின் போது, என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு மீது இன்று புதிய அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாட்சியம் ஏப்ரல் 7-ம் தேதி அளிக்கப்படும்.
“திமுக ஆட்சியில் சொல்லிக் கொள்ளும்படி சாதனை எதுவும் இல்லை”
யார் மீதும் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என்ற கொள்கையில் இருந்தவன் நான்; ஆனால், திமுகவின் எல்லையற்ற வன்மப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, என் வாழ்நாளில் முதல்முறையாக இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன்; முதலமைச்சரின் கண்ணீர் அவரது கட்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, அதிமுகவுக்காக அல்ல; ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் படி எந்த சாதனையும் இல்லாததால், மக்களைத் திசைதிருப்ப முதல்வர் ‘நீலிக்கண்ணீர்’ வடிக்கிறார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
வாஜ்பாய் ஆட்சியில் திமுகவை பாஜக விழுங்கியதா?
“பாஜக அதிமுகவை விழுங்கிவிடும்” என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்; “1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது திமுக விழுங்கப்பட்டதா? அல்லது தற்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்கிவிடுமா?” மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கப்பட்டது குறித்துத் தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம்; அவர் கட்சியின் மூத்த உறுப்பினர், அவருக்கு விரைவில் வேறு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
