Skip to content

கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது, தமிழ்நாட்டின் நலனே முக்கியம்: துரை வைகோ!

திருச்சி,மார்ச்.11; 26 கட்சிகளை உள்ளடக்கிய திமுகவின் மெகா கூட்டணியில், இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுடன் மட்டுமே தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் பிணக்கு

ஆனால், தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே பிணக்கு நிலவி வருகிறது.

கடந்த தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வென்றது. 2021 தேர்தலைப் போன்றே இம்முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்குமாறு திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

தனிச்சின்னம் என்றால், மதிமுகவுக்கு 4 தொகுதிகள்?

தனிச்சின்னம் எனில், 4 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று திமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குழு கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபோன்ற சூழலில், திருச்சியில் இன்று (மார்ச் 11,புதன்) காலை மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கூடியது. கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுப்பதற்காகக் கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “கட்சியின் நலனை விட தமிழ்நாட்டின் நலனே முக்கியம்” எனக் கூறினார்.

“மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் கூறிவிட்டோம்”

தொடர்ந்து பேசிய அவர்,’கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் தான் இல்லை என்றாலும், தங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தி உள்ளனர்; திமுக அவர்களின் சூழ்நிலையை தங்களிடம் தெரியப்படுத்தி இருக்கின்றனர்; நமது கூட்டணி வலுவாக இருக்கிறது என்று துரை வைகோ தெரிவித்தார்.

மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை என்று துரை வைகோ குறிப்பிட்டார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என துரை வைகோ தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது. அதாவது, திமுகவிடம் மதிமுக சரண்டர் ஆகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *