சென்னை,மார்ச்.12; திரைப்படங்களில் கதாநாயகர்கள் இரட்டை வேடம் போடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால், வெள்ளித்திரையிலிருந்து அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ, தற்போது நடிகர் விஜய்யும் அதுபோன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
அரசியலுக்குப் புதுவரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றது.
எங்களுக்கு 30% வாக்குகள் கிடைக்கும்: தவெக
தேர்தலில் தவெகவிற்கு 30 விழுக்காடுக்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகளே கூறிக் கொள்கின்றனர். ஆனால், சில அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் 10 முதல் 14 விழுக்காடு வரை வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே இதனையும் உறுதி செய்ய முடியும்.
அண்மையில், அதிமுக-பாஜக கூட்டணியில் தவெகவையும் இணைக்க நடிகர் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் இதற்கான முயற்சியை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
தவெகவுடன் பாஜக பேசுகின்றதா? இல்லையா?
தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள், அதிகாரப்பூர்வமாக தவெக உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றே கூறி வருகின்றனர். ஆனால், திரைமறைவில் பாஜகவினர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவே இன்றளவும் பேசப்படுகிறது.
பேச்சுவார்த்தை கைகூடியிருந்தால், திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலேயே பிரதமர் மோடி முன்னிலையில் விஜய்யும் மேடை ஏற்றப்பட்டிருப்பாராம். ஆனால், இழுபறி நீடித்ததால், அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதென பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
60 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் உண்மையா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால், 60 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக பேசிக் கொள்கின்றனர்.
ஆனால், கட்சி தொடங்கியபோதே, விஜய் தான் முதலைமச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டோமே என்று சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு விஜய் முதலமைச்சராக இருப்பார் -அடுத்த இரண்டரை வருடங்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கட்டும் என்று கூறிவிட்டார்களாம்.
விஜய் முதலமைச்சரா? வேண்டவே வேண்டாம்-எடப்பாடி கறார்!
இதனால் பாஜக அதிர்ந்ததோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமி கடுமையாக அதிர்ந்து போய்விட்டாராம். தவெகவின் கோரிக்கை முதலமைச்சர் பதவியாக இருந்தால், கூட்டணிப் பேச்சுவார்த்தையே வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கறாராக சொல்லிவிட்டாராம்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் வேட்பாளர் நேர்காணலையும் தொடங்கிவிட்டார் நடிகர் விஜய்.
கூட்டணி இல்லையெனில், விஜய் 2 தொகுதிகளில் போட்டி?
தனித்துப் போட்டியிடும் சூழல் உருவானால், தான் இரண்டு தொகுதிகளில் களம்காண விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆளுங்கட்சியான திமுக தரப்பு, விஜய்க்கு எதிராக வலுவான வேட்பாளரையே நிறுத்தும் என்று தவெகவினரே பேசிக் கொள்கின்றனர்.
விஜய் போட்டியிடவிருப்பதாக கூறப்படும் தொகுதிகள் குறித்து அவ்வப்போது விதவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி என்று முன்னர் தகவல் பரவியது. பிறகு வேளச்சேரி தொகுதி எனப் பேசப்பட்டது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டி?
தற்போது இரண்டு தொகுதிகள் என்றால் என்னென்ன தொகுதிகள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகியவை தான் அந்த இரண்டு தொகுதிகள் என்று தவெக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இவ்விரண்டு தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாக்கு அதிகம் என்பதால், அது தனது வெற்றிக்கு உதவும் என்று விஜய் நம்புகிறார்.
கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா? என்பதிலேயே குழப்பம்!
கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பதை விஜய் இதுவரை முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. அரசியலுக்கும் தேர்தலுக்கும் முற்றிலும் புதிது என்பதால் மிகவும் சாமர்த்தியாக காய் நகர்த்த வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் இரட்டை தொகுதி என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக பேசிக் கொள்கின்றனர்.
திரையில் இரட்டை வேடம் என்பது வேறு. அரசியலில் இரட்டை தொகுதி என்பது முற்றிலும் வேறு. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அரசியல் எதிரிகளை வெல்வது அவ்வளவு சாதாரண விசயமல்ல.
