சென்னை,மார்ச்.12; தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்தும், காவல்துறையினர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல்துறை மெத்தனம்
குற்றமிழைத்தவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களிடம் காவல்துறையினரும், திமுக எம்எல்ஏ ஒருவரும் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது.
எதையாவது மறைக்கவோ அல்லது வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ முயற்சி நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
இதுபோன்ற சூழலில், பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இட்டுள்ள ஒரு பதிவில், சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது என அவர் சாடியிருக்கிறார்.
:திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது”
திமுக ஆட்சி தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் உறுதி செய்வார்கள் என்று அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் நிலை நிலவுகிறது என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, காட்டாட்சியா ? என்ற ஐயம் தான் எழுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
“எதைப்பற்றியும் கவலையின்றி கடைசி நேரக்கொள்ளையில் திமுக அரசு”
ஆனால், இதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கடைசி நேரக் கொள்ளையிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கையாலாகாத அரசு. மக்களைக் காப்பதற்கு துப்பற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
