சென்னை,மார்ச்.12; தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் பகுதியை சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 10, செவ்வாய்) மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை, அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
காணாமல் போன மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு
மகள் கிடைக்காததால், பதற்றமடைந்த மாணவியின் தந்தை புகாரளிக்க குளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற போது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி நேற்று (மார்ச் 11,புதன்) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் வேடநத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக கிடந்ததை அவரது உறவினர்கள் கண்டுபிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை; எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேடநத்தம் பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தில் தினசெய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
“குற்றமிழைத்தவர்கள் அனைவரையும் உடனே கைது செய்க”
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
மாறாக ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா? என அதிமுக பொதுச்செயலாளர் வினவியுள்ளார்.
“காவல்துறைக்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறையில்லை”
பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் போன பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
திமுக எம்எல்ஏ சமாதானப் பேச்சு நடத்துவது ஏன்?
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர்.
யாரைக் காப்பாற்ற திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
