சென்னை,மார்ச்.13; நாம் தமிழர் கட்சியின் (நாதக) மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், காளியம்மாள். அனல் பறக்கும் பேச்சுகளுக்குப் பெயர் பெற்ற அவருக்கும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காளியம்மாள் நாதகவிலிருந்து விலகினார். 6 வருடங்களாகத் தான் ஆற்றிய பணியை முடித்துக்கொண்டு, கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக அவர் தெரிவித்தார்.
காளியம்மாள் அதிமுகவில் ஐக்கியம்; பொறுப்பு வழங்கப்படலாம்
ஓராண்டுக்கும் மேலாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த அவர்,
சென்னையில் இன்று (மார்ச் 13, வெள்ளி) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அதிமுகவில் சாமானியரும் தலைவராக முடியும்”
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன; ஒன்று, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எளிய குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்; இரண்டு, ஒரு சாமானியரும் தலைவராகும் ஜனநாயக சூழல் அதிமுகவில் உள்ளது; இவ்விரு காரணங்களுக்காகவே அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன்; ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க அதிமுகவில் இணைந்துள்ளேன்; ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் சேர்ந்து (காளியம்மாளுடன் சேர்ந்து அதிமுகவில் இணைந்தவர்கள்) இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்; இந்த முடிவை நான் தனித்து எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் நாள்தோறும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்”
மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்னைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றனர்-விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பல பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்-மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறார்கள்-வரவிருக்கும் தேர்தல் அதற்கான பரிசை தரும் என்று காளியம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை தேவை”
அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. எனது குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பினேன். நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் அதிமுகவில் ஏற்கெனவே செயல்பட்டுள்ளேன். 2010ல் அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்துள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். அதுவரை இந்த தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீண்டும் அந்தத் தவறை செய்யும் போதும் பயம் வரும் அளவுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறையும் என்று காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
