டெஹ்ரான், மார்ச்.13; ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரான் பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு ஈரான் தேசிய கால்பந்து அணி கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது.
டிரம்பின் பாதுகாப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஈரான் அணி பங்கேற்பது குறித்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “ஈரான் தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பைக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்; ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அங்கு இருப்பது உகந்தது என்று நான் நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் டிரம்ப் இவ்வாறு கூறியிருந்தார்.
ஈரான் கால்பந்து அணியின் பதிலடி
டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் அணி சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்துள்ளது. “உலகக் கோப்பை என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நிகழ்வு; இதனை நிர்வகிக்கும் அமைப்பு ஃபிஃபா (FIFA) மட்டுமே தவிர, எந்தவொரு தனிநபரோ அல்லது நாடோ அல்ல” என்று ஈரான் கால்பந்து அணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் அணி தனது திறமையால் மட்டுமே இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளதாகவும், ஒரு தகுதி வாய்ந்த அணியை வெளியேற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
போட்டியை நடத்தும் நாட்டின் பொறுப்பு குறித்து கேள்வி
தொடர்ந்து அந்த அறிக்கையில், “ஈரான் அணியை உலகக் கோப்பையிலிருந்து யாராலும் நீக்க முடியாது; பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு நாட்டை வேண்டுமானால் ‘தொகுப்பாளர்’ (HOST) என்ற தகுதியிலிருந்து நீக்கலாம்; உலகளாவிய இந்த விளையாட்டுத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு நாடு, போட்டியை நடத்தும் தகுதியை இழக்கிறது” என்று அமெரிக்காவை மறைமுகமாகச் சாடியுள்ளது.
அரசியல் பதற்றங்களால் ரசிகர்கள் மத்தியில் கவலை
அரசியல் பதற்றங்கள் விளையாட்டுத் துறையிலும் எதிரொலிப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஃபிஃபா இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ஈரான் அணி ஜூன் 15 அன்று நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் மோதல்களுக்கான களமாக இருக்கக் கூடாது என்பதே கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
