Skip to content

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு பாகிஸ்தான் வீரர் ஏலம் எடுக்கப்பட்ட விவகாரம்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் ஆற்றிய எதிர்வினை என்ன?

மும்பை,மார்ச்.14; பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை, சன் குழுமத்திற்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ (Sunrisers Leeds) அணி ஏலத்தில் எடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டுள்ளது.

பின்னணி என்ன? எந்த தொடருக்கான ஒப்பந்தம்?

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி , இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100-பந்து கிரிக்கெட் லீக்கான (100-ball cricket league) தி ஹண்ட்ரட் அணியில் விளையாடுகிறது . முன்னர் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த அணி, லீட்ஸை தளமாகக் கொண்டது மற்றும் இந்திய ஊடக நிறுவனமான சன் குழுமத்திற்கு சொந்தமானது.

லண்டனில் நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு (1,90,000 பவுண்டுகள்) ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் ஆற்றிய எதிர்வினை

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “இது எங்களுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல; இது ஒரு வெளிநாட்டு லீக் தொடர்; ஐபிஎல் தொடருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; வெளிநாட்டுத் தொடர்களில் எந்த வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது அந்தந்த அணி உரிமையாளர்களின் தனிப்பட்ட முடிவு; இதில் பிசிசிஐ தலையிட முடியாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டவர் அப்ரார்

அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, ட்விட்டரில் (X) #BoycottSRH போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின. மேலும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுவது என்ன?

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, “அப்ரார் ஒரு சிறந்த ‘மிஸ்டரி ஸ்பின்னர்’- அணியின் வெற்றிக்கு அவர் தேவை என்பதால் முன்னுரிமை அடிப்படையில் அவரைத் தேர்வு செய்தோம்; திறமையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பை எப்படி கையாளப் போகிறது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி நிர்வாகம்?

விளையாட்டு மற்றும் அரசியல் எல்லைகளுக்கு இடையிலான விவாதம் மீண்டும் ஒருமுறை சூடுபிடித்துள்ளது. இதில் தலையிடப் போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கூறிவிட்ட நிலையில், சன்ரைசர்ஸ் நிர்வாகம் ரசிகர்களின் எதிர்ப்பை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *