சென்னை,மார்ச்.14; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக பிரபலமான சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டி அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இன்ஸ்டா ரீல்ஸ் சிறுவர்கள்; பாராட்டிய ஸ்டாலின் மீது விமர்சனம்
இதற்கு ஆதரவாகவும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஒரு முதலமைச்சருக்கு எத்தனையோ தலையாயப் பணிகள் இருக்கும் போது சிறுவர்களுடன் ரீல்ஸ் எடுத்துப் போடுவது முக்கியமா? என்கிற ரீதியிலும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
நீங்கள் ஆட்சி நிர்வாகத்தில் எப்போது கவனம் செலுத்துவீர்கள்?
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்?” என்று விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
விளாத்திகுளம் விவகாரத்தில் வேகம் காட்டாமல் ரீல்ஸ் போடுவதா?
விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை; ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை; நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? என்று அண்ணாமலை வினவியுள்ளார்.
குடிநீர், கழிவறை வசதியற்ற பள்ளிகள்; பல்லி விழுந்த உணவு…
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டடங்கள் இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றன. பல்லி விழுந்த உணவு உண்டு, 43 பள்ளிக் குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு தரமற்ற காலை உணவும், அழுகிய முட்டையுடன் மதிய உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
ரீல்ஸ் சிறார்களை விளம்பர வெறிக்குப் பயன்படுத்தலாமா?
இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு, கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சரே? என்று அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
பள்ளிவரை வந்துவிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்துக!
மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்துவிட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
