Skip to content

திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’… கரூர் சம்பவத்தின் சகுனி: ஆதவ் அர்ஜுனா மீது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் குற்றச்சாட்டு!

புதுச்சேரி, மார்ச்.15; தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது புதுச்சேரி லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அதிரடியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆதவ்: தவெகவை அழிப்பதே வேலை…!!

புதுச்சேரியில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆதவ் அர்ஜூனா தவெகவிற்குள் நுழைந்தது சேவையாற்றுவதற்காக அல்ல; அவர் திமுகவின் ஒரு ‘ஸ்லீப்பர் செல்’; விஜய்யையும் அவரது கட்சியையும் வேரோடு அழிக்கும் திட்டத்துடன் அவர் (ஆதவ் அர்ஜூனா) உள்ளே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்; தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைத் தடுத்து, அந்தக் கட்சியை தனிமைப்படுத்துவதே அர்ஜூனாவின் முக்கிய வேலையாகும் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கரூர் சம்பவத்தின் பின்னணியில் சகுனியாக இருந்தவர் ஆதவ்”

விஜய்க்கு தவறான தகவல்களை கொடுத்து, மக்கள் ஆதரவை எதிரணிக்கு சாதகமாகத் திருப்பும் சதி வேலைகளில் ஆதவ் ஈடுபட்டு வருவதாகவும் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார்.
கட்சியில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாக சார்லஸ் விமர்சித்திருக்கிறார்.

கரூர் துயரச் சம்பவத்தில் 41 அப்பாவி உயிர்கள் பறிபோன கோர சம்பவத்திற்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் ஆதவ் அர்ஜூனா தான் என்றும் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார்.

“சிபிஐ விசாரணையில் ஆதவ் அர்ஜூனாவின் முகத்திரை கிழியும்”

சிபிஐ விசாரணையில் ஆதவின் முகத்திரை கிழியும் என்று கூறியுள்ள சார்லஸ் மார்ட்டின், செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்துச் சென்றதிலும் ஆதவ்-க்கு பங்கு உண்டு என சார்லஸ் தெரிவித்துள்ளார்.

தவெக-வின் ரகசியங்களை கசிய விடுவதும், கட்சிக்குள் குழப்பங்களை விளைவிப்பதும் இவருடைய வேலைதான் என்பது ஜோஸ் சார்லஸ் கூறியிருக்கிறார்.

குடும்பப் பெயருக்கு களங்கம்

“ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசைக்காக எங்கள் குடும்பத்தின் நற்பெயரைப் பயன்படுத்தி வருகிறார். அவரது தேவையற்ற பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜோஸ் சார்லஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் சார்லஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் யார்?

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர் ஆவார். சார்லஸின் சகோதரி டெய்சியை ஆதவ் அர்ஜூனா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மார்ட்டின் குழுமத்தின் (Martin Group of Companies) முக்கிய பொறுப்பில் இருந்து, கட்டுமானம், விளையாட்டு, மீடியா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல துறைகளில் சார்லஸ் வணிகம் செய்து வருகிறார்.

பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி கண்டவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

முன்பு பாஜகவில் இயங்கிவந்த அவர், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, புதுச்சேரியில்சொந்தமாக கட்சி தொடங்கி, ரங்கசாமி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

தனது மைத்துனர் ஆதவ் அர்ஜூனா மீது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் என்று பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *