கோவை,மார்ச்.15; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. அவர்கள் ஏதோ ஒன்றிற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம்
தவெக தனித்துப் போட்டியா அல்லது யாருடனும் கூட்டணியா என்பதும் தெளிவில்லை.
இதுபோன்ற சூழலில் கோவை காளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
காங்கிரசுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக உயர்த்திக் கொடுக்கும்போது, தங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேட்பதில் நியாயம் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
வைகோ கஷ்டப்பட்டு சிரிப்பதை பார்க்கும் போது வேதனை
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது வேதனையாக இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
திமுக கொடுக்கும் ஐந்து தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார்; திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் திமுக கூட்டணியில் மாற்றம் வரும்
தேர்தலுக்கு முன்னர் திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது; பொது எதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேருவது தமிழ்நாடு அரசியலில் நிகழ்ந்துள்ளது; தேர்தலுக்கு முன்னர் கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை கேட்டது தவெகதான்; நாங்கள் ஆதரித்தோம்..!
கரூர் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது தவெகதான், அவர்கள் கேட்டார்கள் என்பதற்காக நாங்களும் ஆதரவு தெரிவித்தோம் என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகன் படம் குறித்து விஜய்யே எதுவும் சொல்லாத போது நான் என்ன சொல்ல முடியும்? என்று அண்ணாமலை வினவினார்.
ஜனநாயகன் பட விவகாரம்: விஜய் வாய் திறக்கவில்லை
அந்தப்படம் வெளியாகாததற்கு பாஜகதான் காரணம் என்று அப்படத்தில் நடித்த விஜய்யே கூறவில்லை; எனவே, விஜய்யிடம் சிபிஐ நடத்தும் விசாரணைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
யார் வீட்டிலும் சிலிண்டர் பிரச்னை இல்லாத போது தலையில் சிலிண்டரை வைத்து காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது; விளாத்திகுளம் பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் துறையை நிர்வகிக்கும் ஸ்டாலினின் தோல்வியை காட்டுகிறது; புகார் கொடுத்த போதே காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்னை நடந்திருக்காது; விளாத்திக்குளத்திற்கு முதலமைச்சர் நேரில் செல்ல வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
