Skip to content

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்; மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி,மார்ச்.15; தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

5 மாநிலங்களில் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல்

இதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரி (ஜூன் 15), மேற்குவங்கம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் உள்பட ஐந்து மாநிலங்களிலும் மொத்தமுள்ள 824 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்.23-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

அதன்படி, ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அதன்படி, 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடக்கம்

வேட்புமனு தாக்கல் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று காலை 10 மணி முதலே முன்னணி நிலவரமும், மாலை முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரமும் தெரியவரும். அன்றிரவே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.

மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 பேர்; பெண் வாக்காளர்கள் அதிகம்

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர். பெண் வாக்காளர்கள் 2,89, 60,838 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர். 18 முதல் 19 வயதுடைய வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர். மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 3.99 லட்சம் பேர்.

முன்பிருந்ததை விட 74,07,207 வாக்காளர்கள் குறைவு

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு, 6 கோடியே 41 லட்சத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். முன்பிருந்த பட்டியலை விட 74 லட்சத்து 7ஆயிரத்து 207 பேர் குறைவாக உள்ளனர். இது முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட 12 விழுக்காடு குறைவாகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *